பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால்
தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தற்போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற "2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதால் நெருக்கடியிலிருந்து இலங்கை முற்றாக மீண்டுவிட்டது என்று கருத முடியாதென வலியுறுத்திய ஜனாதிபதி இந்தச் செயன்முறையின் வெற்றிக்கு எதிர்காலத்தில் பாரிய அர்பணிப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக இலங்கை முன்னொருபோதும் காணாத பொருளாதார நெருக்கடியை கண்டதென தெரிவித்த ஜனாதிபதி, அந்த நெருக்கடியிலிருந்த மீண்டு வருவதற்கான முயற்சிகளை தாம் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்திருந்தமையையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

தேசிய சட்ட மாநாட்டில் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் பற்றி ஆராயப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்காக நுவரெலியா தெரிவு செய்யப்பட்மையும் பொருத்தமானதென கருதுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கோப்பி நடுகை மற்றும் பெருந்தோட்ட பொருளாதாரத்தை ஆரம்பித்து வைத்தவர்களின் முன்னோடியாக திகழ்ந்த ஆளுநர் எட்வட் பான்ஸ் அவர்களுக்கும் நுவரெலியாவில் வீடொன்று காணப்பட்டது.

கடந்த 10 – 11 மாதங்களுக்கு முன்பாக வலுவிழந்த நாடாக மாறிவிடும் வகையிலான நிலைமைகளை கடந்து வந்துள்ளோம். எவ்வாறாயினும் தற்போது சட்டம் ஒழுங்கு , அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மையும் உருவாகியுள்ளது. இந்த நிலைத் தன்மை குறுகிய காலத்திற்குரியது என்பதால் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை உணர வேண்டும்.

முன்னருபோதும் காணாத வகையிலான சவாலை இந்நாட்டின் பொருளாதாரம் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக கண்டிருந்தது. இருப்பினும் சட்டம் ஒழுங்கு , அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் அர்பணிப்புடன் முன்னெடுத்திருந்தாலும் நாடு நெருக்கடியிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதென கூற முடியாது.

தற்போதும் பெரும்பாலான பொதுமக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். பாராளுமன்றம், நீதிமன்றம், ஊடகம், தனியார் துறை,தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள், நமது நாட்டின் பொதுமக்கள் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்பு மீதான நம்பிக்கை முற்றாக இழந்துள்ளனர். என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,

கடந்த சில வருடங்களில் பல சவால்களுக்கு மத்தியிலும் சட்டத்தரணிகள் சங்கம் தனது உறுப்பினர்களை ஒன்று திரட்டி பல்வேறு கருப்பொருள்களின் கீழ் மாநாடுகளை நடத்தியது.

2022 ஆம் ஆண்டிற்கான அதன் கருப்பொருள், சட்டத் தொழிலின் இயலுமையை மீள்கட்டமைத்தல் மற்றும் இசைவாக்கமடைதல் அதன் பின்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு நெருக்கடியின் ஊடாக பயணித்தலில் - சட்டத்தின் வகிபங்கு என்ற கருப்பொருளின் கீழ் நாங்கள் ஒன்றிணைந்தோம்.

கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நாம் அனைவரும் முன்னரில்லாத சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஆனால் இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும், முன்னேறவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது நம் அனைவரின் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.

சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர், சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன,

சம்பிரதாயமாக, தேசிய சட்ட மாநாடு, சட்டத்தொழில் தொடர்பான தினசரி தோன்றும் விடயங்கள் பற்றி கலந்துரையாடவே அர்ப்பணித்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாடு 2023/2024 வேறுபட்ட அணுகுமுறையை எடுத்துள்ளது. நாட்டின் தேசிய நலன்களுக்காகவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் சட்டத்தரணிகள் சமூகத்தின் வகிபங்கு பற்றி கலந்துரையாட இந்த மாநாட்டை நாங்கள் ஒதுக்கியுள்ளோம். இந்த முயற்சியில் பல தரப்பினருடன் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். முன்னெப்போதையும் விட நமது நாடு, அரசியல் மற்றும் பொருளாதார சவாலை எதிர்கொண்டுள்ளது என்பது இரகசியமல்ல. எனவே, நாட்டில் அத்தியாவசியமான சட்டக் கட்டமைப்பும் சுதந்திரமான நீதித்துறையும் இருப்பது அவசியம்.

சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதற்கும், நாட்டை எதிர்பார்க்கும் திசையில் நகர்த்துவதற்கும், தொலைநோக்கு மற்றும் ஒழுக்க நெறியுடைய, ஜனநாயகத்தை மதிக்கும் மற்றும் நமது குடிமக்களின் உரிமைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், தலைமையொன்று அவசியம்.

எங்கள் தொழில் வரலாற்றில் முதன்முறையாக, சட்டத் துறையில் மறுசீரமைப்பு செய்யவேண்டிய அல்லது திருத்தப்பட வேண்டிய பகுதிகள் குறித்து அனைத்து தரப்பினர்களுடனும் கலந்துரையாட, தேசிய சட்ட மாநாட்டை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.

நாட்டின் நீண்டகால அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதைப் போன்று, இலங்கையை வளர்ச்சியடையும் நாட்டிலிருந்து அபிவிருத்தி அடைந்த நாடாகக் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சட்டங்களை எமது சட்டக் கட்டமைப்பில் அறிமுகப்படுத்துவதற்கும், அதற்காக சட்டங்களை இயற்றுபவர்களுக்கு உந்துதல்களை ஏற்படுத்தத் தேவையான ஆதரவையும் விழிப்புணர்வையும் இந்த மாநாட்டின் மூலம் வழங்குவதே எமது நோக்கமாகும்""என்று தெரிவித்தார்.

தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் பைசர் முஸ்தபா,

"இன்று ஒரு தேசமாக நாம் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். இது சட்டத்தரணிகள் சமூகத்தை ஒன்றிணைக்கும் மாநாடு மாத்திரல்ல. நாடு மற்றும் பொருளாதாரத்தை மீட்பதற்காக வேண்டி, கொள்கை வகுப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றத்தின் தொடக்கமாக இந்த மாநாட்டை நடத்த நாங்கள் முடிவு செய்தோம்.

ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பது முக்கியம். மேலும், தொழில் மற்றும் தொழில்முனைவோர் சட்டத்தின் ஆட்சியை ஏற்க வேண்டும்.

இந்த விடயத்தில் நிரந்தரமான தீர்வுகளை காண்பதில் அரசியல் தலைமைகளையும் ஈடுபடுத்துவது மிகவும் அவசியம். அப்போதுதான் இந்த மாநாட்டின் வெற்றிகரமான முடிவுகளை எம்மால் பெற முடியும்."என்று தெரிவித்தார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி