பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்
கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள சபை அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானீ ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கமைய ஜூன் 7 புதன்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் ஜூன் 6 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மு.ப 9.30 மணிக்குக் கூடவிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை சிவில் விமான சேவைச் சட்டத்தின் கீழ் 2303/18 மற்றும் 2304/46 இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் 2261/49, 2261/50, 2261/51 இலக்க வர்த்தமானி அறிவித்தல்கள் உள்ளிட்டவற்றில் பிரசுரிக்கப்பட்ட 13 ஒழுங்குவிதிகள், கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் 2287/24 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

ஜூன் 7ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட இலங்கையின் கைத்தொழில் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

ஜூன் 8ஆம் திகதி பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மற்றும் 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் தீர்மானம், தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் பி.ப 5.00 மணிக்கு பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பான ஏழு பிரேரணைகளை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணையும் அன்றையதினம் பிரேரிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

ஜூன் 9 ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன.

இதற்கமைய சகல அரச நிறுவனங்களையும் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் நிலையப்படுத்தல் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சமிந்த விஜேசிறியின் பிரேரணை, பயிர்களை சேதப்படுத்துகின்ற மந்திகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ நாலக பண்டார கோட்டேகொடயின் பிரேரணை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை வலுவூட்டுதல் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிங்ஸ் நெல்சனின் பிரேரணை மற்றும் சிறுவர்களின் சுகாதாரக் கல்வி தொடர்பான நிகழ்ச்சித்திட்டமொன்றை பாடசாலை மட்டத்தில் பிரபல்யப்படுத்துதல் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்ஹவின் பிரேரணை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி