ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், தகவல் தொடர்பு வசதிக்காக பல்வேறு நாடுகளில் கடலுக்கு அடியில் ‘இன்டர்நெட் கேபிள்'களை பதித்து பயன்படுத்தி வருகிறது. இதன் வழியே சுவீடன், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற பல நாடுகள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு முகமை, டென்மார்க் ராணுவ புலனாய்வு சேவையின் ஒத்துழைப்புடன் டென்மார்க்கின் இன்டர்நெட் கேபிள்களை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை உளவுபார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டென்மார்க்கின் அரசு ஊடகமான டி.ஆர். இந்த அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.

2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் டென்மார்க் ‘இன்டர்நெட் கேபிள்' வாயிலாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக டி.ஆர். தெரிவித்துள்ளது.

டென்மார்க் ராணுவ புலனாய்வு சேவையின் மீது நடந்த உள்நாட்டு விசாரணையின் போது, அமெரிக்க உளவு அமைப்பின் இந்த சதி அம்பலமானதாக கூறப்படுகிறது.

டென்மார்க் ‘இன்டர்நெட் கேபிள்'களில் இருந்து குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையத்தளத்தில் அதிகம் தேடப்பட்டவை மற்றும் பிற செய்தி பகிர்வு சேவைகள் என எல்லாவற்றையும் இடைமறித்து விரிவான தரவுகளை அமெரிக்கா பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தவிர, அந்த நாட்டின் அப்போதைய வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்டீன்மெயர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பீர் ஸ்டீன்பிரக் ஆகியோரையும் அமெரிக்கா உளவு பார்த்ததாக தெரிகிறது.

ஜெர்மன் மட்டுமின்றி சுவீடன், நார்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் அமெரிக்காவின் இந்த உளவு நடவடிக்கையில் இலக்காக இருந்ததாக டி.ஆர். கூறுகிறது.

இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அமெரிக்கா மற்றும் டென்மார்க் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் டென்மார்க் ராணுவ புலனாய்வு சேவை ஆகியவை உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரான்ஸ் அதிபர் மெக்ரான், “நட்பு நாடுகளுக்கு இடையில் இது ஏற்கத்தக்கது அல்ல.‌ இது தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்” என கூறினார்.

அதனை தொடர்ந்து மெக்ரானின் வார்த்தைகளுக்கு தான் உடன்படுவதாக ஏஞ்சலா மெர்கல் குறிப்பிட்டார்.

இதனிடையே அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் துணை ஜனாதிபதியாக இருந்தபோது இந்த உளவு நடவடிக்கை நடந்திருப்பதால் அதில் நிச்சயம் அவரது பங்கு இருக்கும் என அமெரிக்காவின் மூத்த பத்திரிகையாளரும், தேசிய பாதுகாப்பு முகமையின் முன்னாள் ஊழியருமான எட்வர்ட் ஸ்னோடென் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி