உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முழுமையற்ற வகையில் காணப்படுவதாக, சட்ட மாஅதிபர் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில், உடனடியாக அறிக்கையொன்றை வழங்குமாறு CIDயிடம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கோரியுள்ளார்.

CID விசாரணை நிறைவு பெறாததால் தமது பதவிக்காலத்துக்குள் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல்செய்ய முடியாமல் போயுள்ளதாக சட்ட மாஅதிபர் பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் 130 பக்க அறிக்கையொன்றை சட்ட மாஅதிபர், பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன, நேற்று (15) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (2019 ஏப்ரல் 21) சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் 5 பேர் மீதான விசாரணைகள் முழுமையடையவில்லை எனவும் அதன் 'A' குழு சந்தேகநபர்கள் 42 பேர் தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்களை எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துமாறும் சட்ட மாஅதிபரினால் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, தெரிவித்துள்ளார்.

தான் அறிந்த வரையில், குறித்த விசாரணைகள் சம்பந்தமாக, சில மாதங்களுக்கு முன்னர், 32 சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு 8 கோப்புகளை சட்ட மாஅதிபருக்கு அனுப்பியுள்ளதாகவும், இக்காலப் பகுதி முழுவதும் குறித்த விடயம் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் CID அதிகாரிகள் செயற்பட்டு வந்ததாகவும், சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஆயினும், குறித்த கோப்புகளுக்கு மேலதிகமாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் வரும் வரை, தாம் எதிர்பார்த்துள்ளதாக சட்ட மாஅதிபர் தெரிவித்திருந்ததாகவும், தற்போது குறித்த ஆணைக்குழு அறிக்கை கிடைக்கப்பெற்று 2 மாதங்களாகின்றன எனத் தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, தற்போது அவர் குறிப்பிட்ட சில சாட்சிகள் தொடர்பிலா, பிரதிவாதிகள் தொடர்பிலா அல்லது யார் தொடர்பில் என்பது குறித்து, CID யிடம் நான் அறிக்கை கோரியுள்ளேன் என்றார்.

அதற்கமைய குறித்த அறிக்கை, இன்று (16) மாலை அல்லது நாளை தனக்கு கிடைக்கப்பெறும் எனவும், அதன் பின்னர் இது தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது சட்ட மாஅதிபர் மாத்திரமே ஓய்வு பெறுவதாகவும், சட்ட மாஅதிபர் திணைக்கள ஊழியர்கள் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டு வருவதால் இது தொடர்பான நடவடிக்கையில் எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது நோக்கமாகவும் இருக்கின்றது.

இது தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளில் பெரும்பாலானவை மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. ஆயினும் அது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பிலேயே தான் அறிக்கை கோரியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி