அரசாங்க அமைச்சருடன் மோதலின் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சிறைச்சாலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி, சிறைக்கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கும் குழு, ஏப்ரல் 27, செவ்வாய்க்கிழமை பொலிஸ் மாஅதிபரிடம்  முறைப்பாடு செய்துள்ளது.

அசேல சம்பத் ஏப்ரல் 13ஆம் திகதி கொம்பனித்தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 14ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 19 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு அச்சம் வெளியிட்டிருந்தது.

போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில்  வைக்கப்பட்டிருந்த, அசேல சம்பத் ஏப்ரல் 20ஆம் திகதி காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை கடமையில் இருந்த ஜகத் என்ற அதிகாரியால் தடியால் தாக்கப்பட்டதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு பொலிஸ்மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது. 

"அந்த நேரத்தில் அவர் மேலும் இரண்டு சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டார், அவர்களை அவர் மீண்டும் பார்த்தால் அவரால் அடையாளம் காட்ட முடியும்."

தாக்குதல் காரணமாக அசேல சம்பத் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

அசேல சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை நடத்தவும், இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், அந்த அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா, தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் தேசிய அமைப்பாளர் நிசார் மௌலானா ஆகியோர் கையெழுத்திட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசேல சம்பத் ஏப்ரல் 19ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டதோடு, ஏப்ரல் 26 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

அசேல சம்பத் ஏப்ரல் 14ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 17ஆம் திகதி போகம்பறை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அலுவலகத்திற்கு வருகைதந்து, அலுவலக ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வெளியிடப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமைய, நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

தினமும் ஊடகங்கள் முன்னிலையில் தோன்றும், தமது அமைப்பின் தலைவர் அசேல சம்பத்திற்கு எதிராக நீண்ட காலத்திற்கு முன்னதாக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை, கொம்பனித்தெரு பொலிஸார் திடீரென நிறைவேற்றியுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

அசேல சம்பத்திற்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துகின்ற போர்வையில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்தின் பின்னர், இந்த கைது இடம்பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு முன்னர் கூறியிருந்தது. 

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில், புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய ஆயிரம் ரூபா பெறுமதியான சதொச நிவாரணப் பொதி குறித்து அசேல சம்பத் அவதூறாகப் பேசியதாகவும், அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்ததாக, பொது மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின்  ஊடக பணிப்பாளர் சிரந்த அமரசிங்க ஏப்ரல் 15ஆம் திகதி வெளியிட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிவில் சமூக செயற்பாட்டாளரான அசேல சம்பத், அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி