மன்னாரில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுரத்தின் பாரிய உதிரிப்பாகங்களை ஏற்றி வந்த வாகனத்தை
நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் தொடர்ந்து இன்று காலை வரை மன்னார் தீவுக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் வழிமறித்துப் போராட்டம் நடத்தியமையை அடுத்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைக்கு இன்று காலை மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் இணக்கமான தீர்வு காணப்பட்டது.
பாரிய உதிரிப் பாகங்களுடன் மன்னார் தீவுக்குள் நுழைய விடாமல் வழிமறிக்கப்பட்டிருக்கும் ஐந்து பெரிய வாகனங்களையும் தீவுக்குள் நுழைய அனுமதிக்கவும், அதன் மூலம் கொண்டுவரப்படும் உதிரிப்பாகங்கள் உடனடியாக காற்றாலையாகக் கட்டமைக்கும் வேலையை முன்னெடுக்காமல் இடைநிறுத்தி வைக்கவும் இன்று நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இணக்கம் கண்டன.
போராட்டம் நடத்தும் பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த இணக்க ஏற்பாட்டை பொலிஸ் தரப்புடன் நீதிமன்றத்தில் வாதாடி செய்தார்.
இதன்படி காற்றாலை உதிரி பாகங்களுடன் வரவேண்டிய இன்னும் எழுபது வாகனங்களின் அணியில் இந்த ஐந்து வாகனங்களை மாத்திரம் தீவுக்குள் அனுமதிக்கவும், அதில் எடுத்துவரப்பட்ட பொருள்களை இறக்கி வைத்து விட்டு வாகனங்கள் திரும்பவும், எடுத்துவரப்பட்ட பொருள்களைக் கொண்டு காற்றாலைக் கட்டுமானப் பணி இப்போதைக்கு முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதும் நீதிமன்றத்தில் இணங்கப்பட்டன. இந்த வாகன அணியை நேற்றிரவு பொதுமக்கள் மன்னார் தீவின் நுழைவாயிலில் வழி மறித்தமையை அடுத்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை நிலவியமை தெரிந்ததே. இந்த விடயத்தை இன்று பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
'வாகனங்கள் வீதியை வழிமறித்து நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே மக்களுக்குத் தொல்லை கொடுக்காமல் போராட்டம் நடத்துவோம் என்று போராட்டத்தரப்பால் அளிக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.' - எனத் தெரிவித்து இந்தப் போராட்டத்தை நடத்தும் இரு குருமார்கள் உட்பட அறுவருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
மன்னாரில் நேற்று நள்ளிரவு பதற்றம் ஏற்பட்டதை அடுத்துப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் அது குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கு இன்று விடிகாலை அறிவித்தனர். தாம் உடனடியாகக் கொழும்பில் இருந்து வாகனத்தில் காலையில் நீதிமன்ற நேரத்துக்கு வந்து சேர்வார் என்று சுமந்திரன் அறிவித்தார். அதன்படி காலை ஒன்பதரை மணிக்கு அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
"பொது மக்களுக்கு தொல்லை கொடுப்பது தொடர்பான சட்ட ஏற்பாட்டை, பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் தரப்புக்கு எதிராகத்தான் பிரயோகிக்க வேண்டும். காற்றாலை அமைப்பதும், அதனால் ஏற்படுகின்ற விடயங்களும்தான் பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்கும் விவகாரங்கள்.
அது குறித்து பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்கள். காற்றாலை அமைப்பதற்கு முயற்சிப்பவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட வேண்டிய சட்டத்தைப் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களுக்கு எதிராக பிரயோகிக்க முடியாது'' என்று சுமந்திரன் நீண்ட சட்ட வாதத்தை முன்வைத்தார்.
சுமார் இரண்டு, இரண்டரை மணி நேரம் சட்ட விவாதம் தொடர்ந்தது. காற்றாலை அமைப்புத் தொடர்பான தரப்புகளோடு இடையில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுவதற்காகப் பொலிஸாருக்குக் கால அவகாசம் வழங்கி இரண்டு தடவைகள் வழக்கு இடைநிறுத்தப்பட்டன.
இதன் பின்னர் நீதிமன்றத்தல் நீதிவான் எம்.எம்.சாஜித்தின் வழிகாட்டுதலில் தீர்வு ஒன்றுக்குச் சுமந்திரன் இணக்கம் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், வழிமறிக்கப்பட்டிருக்கும் ஐந்து வாகனங்களையும் இப்போதைக்கு விடுவிக்கவும், அதன் மூலம் கொண்டுவரப்படும் உதிரி பாகங்கள் காற்றாலை அமைக்கும் பணிக்கு உடனடியாக பயன்படுத்தப்படாமல் இறக்கி வைக்கப்படும் என இணக்கம் காணப்பட்டது.
'பொது மக்களுக்குத் தொல்லை கொடுக்காமல் போராட்டம் நடத்துவோம்' என்று போராட்டக்காரர்களால் முன்னர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட இணக்கம் மீறப்பட்டதாகப் பொலிஸாரால் இன்று காலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் சுமந்திரனின் சட்டவாதத்தால் முறியடிக்கப்படாவிட்டால் மேற்படி ஆறு போராட்டக்காரப் பிரதிநிதிகளும் நீதிமன்ற உத்தரவில் கைது செய்யப்படக்கூடிய சூழல் இருந்ததாக பிற சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.