போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை
மேற்கொண்ட யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி, அது தொடர்பான மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக உடல் பாகங்களை கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஏழு மாத குழந்தையின் தந்தையான எதிர்மானசிங்கம் கபில்ராஜின் இறுதிச் சடங்குகள், அவர் வசித்து வந்த முல்லைத்தீவு, முத்தையன்கட்டு, இடதுகரை, ஜீவநகர் பகுதியில் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆகஸ்ட் 11, திங்கட்கிழமை நடைபெற்றதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகஸ்ட் 9ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 32 வயதான கபில்ராஜின் பிரேத பரிசோதனையை யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், ஆகஸ்ட் 10ஆம் திகதி 15 யாழ்ப்பாண மருத்துவ மாணவர்களுக்கு முன்பாக நடத்தியுள்ளார்.
குளத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம் சிதைவடைந்திருந்ததால், மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாத நிலையில், அது தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் பாகங்களை கொழும்புக்கு அனுப்ப சட்ட வைத்திய அதிகாரி தீர்மானித்துள்ளார்.
எதிர்மானசிங்கம் கபில்ராஜின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அவரது மரணம் தொடர்பான சில தகவல்களை சட்ட வைத்திய அதிகாரி உறவினர்களுக்கு வெளிப்படுத்தியதாக பிராந்திய செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கை காவல்துறை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கையில், எதிர்மானசிங்கம் கபில்ராஜின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடத்தப்பட்டு, மரணம் தொடர்பான திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளத்தில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கபில்ராஜ், 13ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவ வீரர்களின் சித்திரவதையாலேயே உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முகாமிற்குள் நுழைந்த அவர் உட்பட ஐந்து பேரை இராணுவ வீரர்கள் 'விரட்டியடித்ததாக' காவல்துறை கூறுகிறது. அது எவ்வாறு செய்யப்பட்டது என்பதை காவல்துறை விளக்கவில்லை. அத்துமீறி நுழைந்ததாக காவல்துறை கூறுகிறது. ஆனால், உயிர் தப்பியவர்களும் கிராம மக்களும் கூறுவதாவது, முகாமில் உள்ள பழைய இரும்புகளை அகற்றுவதற்கு ஒரு இராணுவ அதிகாரி விடுத்த அழைப்பின் பேரிலேயே ஐவரும் அங்கு சென்றதாக கூறுகின்றனர்.
பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒட்டுசுட்டான் காவல்துறையினரும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.