leader eng

வன்னியைச் சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற தமிழ் ஊடகவியலாளரை பயங்கரவாத பொலிஸார் காரணத்தை குறிப்பிடாமல் விசாரணைக்கு

அழைத்துள்ளமைக்கு உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தமிழ் ஆர்வலர்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID), முல்லைத்தீவைச் சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் கனபதிப்பிள்ளை குமணனை எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளமை பல வருடங்களாக இடம்பெறும் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் அண்மைய சம்பவமாகும் என சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆளுநருமான அம்பிகா சற்குணநாதன் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Ambika.png

ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கதென தன்னுடைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு உறுப்பினரான ராஜ்குமார் ரஜீவ்காந், இலங்கை அரசின் இந்த மோசமான அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

Rajeevkanth.png

செம்மணி அகழ்வாய்வு விடயங்களை தொடர்ச்சியாக அறிக்கையிட்டு வரும் குமணனிடம் காணொளி நேர்காணல் ஒன்றை பதிவு செய்வது தொடர்பில் கோரிக்கை விடுத்தபோது அவருக்கு காணப்படும் அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பு காரணமாக அவரால் அந்த செவ்வியை வழங்க முடியவில்லை என இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சாய்கிரன் கண்ணன் தன்னுடைய தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுத் தொடர்பில் குமணனுடனான தனது தனிப்பட்ட உரையாடல் குறித்த ஸ்கிரீன் சொட்டையும் (screen shot) அவர் பகிர்ந்துள்ளார்.

Kumanan11.jpeg

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அலம்பில் அலுவலகத்தில் ஒரு தொடர்ச்சியான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னிலையாகுமாறு கனபதிப்பிள்ளை குமணனுக்கு கடிதம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் வாக்குமூலம் பெறப்படவுள்ள விசாரணை எதுவென்பது தொடர்பில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் முல்லைத்தீவு துணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி கடிதத்தில் குறிப்பிடவில்லை.

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து தைரியமாக தகவல்களை வெளிப்படுத்தி வரும் ஊடகவியலாளர் குமணனின் குரல் ஒருபோதும் மௌனிக்கப்படக்கூடாது என அல்-ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு அறிக்கையிடும் முன்சா முஸ்டாக் (Munza Mushtaq) குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு நீங்கள் வாக்குறுதியளித்த மாற்றம் இதுதானா?” எனவும் அவர் தனது X தளத்தில் இட்டுள்ள பதிவில் இலங்கைப் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

Munza.png

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச கவனத்தை ஈர்த்த செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளின் அகழ்வாராய்வுகளுடன் தொடர்புடைய குமணனின் புகைப்படங்கள் பிரதான ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன.

அவர் சர்வதேச பாடநெறி ஒன்றுக்காக வெளிநாட்டில் இருந்தபோது, கடந்த ஒக்டோபரில் அவரது வீட்டிற்கு வந்த பயங்கரவாத பொலிஸ் அதிகாரிகள், வடக்கின் காணி அபகரிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தகவல்களை வழங்குவதாக குமணனின் வயதான தந்தையிடம் குற்றம் சாட்டியிருந்தனர்.

தமிழ் ஊடகவியலாளர்களையும், சிவில் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்பத்திற்குள்ளாக்குவது இலங்கை பொலிஸாரின் வழமையான செயற்பாடு என சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் தனது பேஸ்புக் பதிவில் சில சுட்டிக்காட்டியுள்ளார்.

“விசாரணைக்கு அழைக்கப்படுபவருக்கு அழைப்புக்கான காரணம் வழங்கப்பட வேண்டும் என்பது சட்டத்தேவை. சட்டத்திற்கு முரணான விதத்தில், எதேச்சதிகாரமான முறையில் விசாரணை என்ற பெயரில் தமிழ் ஊடகவியலாளர்களையும், குடியியல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் அழைத்து அச்சுறுத்துவது அல்லது அசௌகரியத்துக்கு உள்ளாக்குவது என்பது இலங்கை பொலிஸ் காலங்காலமாகப் பின்பற்றுகின்ற நடைமுறை.”

Kugadasan.png

அரசாங்கங்கள் மாறினாலும், பாதுகாப்பு நிலைமை அப்படி நீடிக்கிறது என மானுடவியலாளரும், செயற்பாட்டாளருமான விந்தியா புத்பிடிய (Vindhya Buthpitiya) சுட்டிக்காட்டுகின்றார். பிரதான ஊடகங்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கும் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து குமணன் தொடர்ச்சியாக துணிச்சலுடன் அறிக்கையிட்டு வருவதாக அவர் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Vindhya.png

வடக்கு மற்றும் கிழக்கு ஊடகவியலாளர் ஏன் தொடர்ந்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள்? என, சட்டத்தரணி லுவி நிரஞ்சன் (Luwie Niranjan) தனது X பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Niranjan.png

தமிழ் ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அமைப்புகள் மீதான பாதுகாப்புத் துறை துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழழமுறைகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் கண்டறியவில்லை எனின், இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அடை முடியாது என நெருக்கடி குழுவின் (Crisis Group) இலங்கை பிரதிநிதி அலன் கீணன் தனது X பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Keenan.png

ஊடகவியலாளர் குமணன் பயங்கரவாத பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையானது ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்த கடுமையான கவலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தி இந்து பத்திரிகைக்கு இலங்கை விவகாரங்களை அறிக்கையிடும் மீரா ஸ்ரீநிவாசன் தன்னுடைய X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Meera.png

முன்னைய அரசாங்கங்களின் இனவெறி நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தெரிவிக்கும் அரசாங்கம், ஏன் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகிறது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் கீழும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவதாக அவர் X தளத்தில் இட்டுள்ள பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Ponnambalam.png

வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை தான் வன்மையாகக் கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

துணிச்சலுடன் செயற்படும் ஊடகவியலாளர் குமணனை, பயங்கரவாத விசாரணை என்ற பெயரில் அழைத்து, அச்சுறுத்தி அவரது ஊடகப்பணியை முடக்கும் முயற்சியே இதுவென தனது X தள பதிவில் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.   

Shanakyan.png

முல்லைத்தீவு ஊடக மையத்தின் தலைவரான புகைப்பட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன், புகைப்படம் மற்றும் ஆவணங்கள் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் மற்றும் ஊழல்களை அம்பலப்படுத்தியதன் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்த ஒரு ஊடகவியலாளர் ஆவார்.

மே 21 அன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மரபு இலங்கையை ஆட்டிப்படைக்கிறது" (Legacy of enforced disappearances haunts Sri Lanka) என்ற கட்டுரைக்கு புகைப்பட ஊடகவியலாளர் கனபதிப்பிள்ளை குமணன் எடுத்த புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல, காலி முகத்திடல் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு ஊடகவியலாளர் குமணன் எடுத்த புகைப்படங்கள், டெய்லி டெலிகிராஃப், வைஸ் வேர்ல்ட் நியூஸ், ஈவினிங் ஸ்டாண்டர்ட், தி கார்டியன், அல் ஜசீரா, பிபிசி மற்றும் பிற உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

பொதுவாக வன்னியைப் பற்றியும், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும் பல வருடங்காக செய்தி வெளியிட்டு வரும் கனபதிப்பிள்ளை குமணன், தனது செய்திக்காக பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர், மரக் கடத்தல் மோசடியை அம்பலப்படுத்தியதற்காக, அவரது தொழில்முறை சகாவான சண்முகம் தவசீலனுடன் சேர்ந்து கொடூரமான தாக்குதலுக்கும் உள்ளானார்.

இதேவேளை, தன்னுடைய X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஊடகவியலாளர் கனபதிப்பிள்ளை குமணன் இந்த அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச் சட்டம் இரத்து செய்யப்படுமென தான் எதிர்ப்பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். 

“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வார்கள், அதனால் நாங்கள் அச்சமின்றி வேலை செய்ய முடியும் என்பதுதான் எனது ஒரே நம்பிக்கை. ஆனால் இப்போது, அவர்கள் ஆட்சிக்கு வந்து சுமார் 10 மாதங்கள் ஆகியும், அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை.” 

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணை தனக்கு கவலையளிப்பதாகவும் தனது நாட்டில் தான் அச்சமின்றி சுதந்திரமாக வாழவும் பணியாற்றவும் விரும்புவதாகவும் குமணன் தனது X தளத்தில் இட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Kumanam.png


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி