அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விபத்துக்குள்ளாகி கழுத்து மற்றும்
நரம்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சட்டவிரோத நில பரிவர்த்தனை தொடர்பில் இடம்பெற்ற வழக்கின் போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பசில் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாத்தறை நீதவான் அருண புத்ததாசவினால் இன்று (23) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பகுதியில் 50 மில்லியனைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு தொடர்பாக இந்த வழக்கு இடம்பெற்றிருந்தது.
குறித்த நிலத்தை வாங்கியமை தொடர்பில் பசில் ராஜபக்ச உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் முன்னதாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையான போதிலும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியின் சகோதரி அயோமா கலப்பத்தி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இந்நிலையில் வழக்கின் மனுதாரர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பின்வரும் உண்மைகளை நீதிமன்றுக்கு வழங்கியிருந்தார்,
"இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான பசில் ராஜபக்சவுக்கு செப்டம்பர் 18, 2024 அன்று மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழலில், அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என கூறப்பட்டுள்ளது.
எனவே, அவரது பிணையை இரத்து செய்து, நியாயமான காரணத்தை தெரிவிக்காமல் நீதிமன்றத்தைத் தவிர்ப்பதற்காக பிடியாணை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்திருந்தார்.
இதனைதொடர்ந்து பிரதிவாதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தனது வாதங்களை முன்வைக்கையில்,
“எனது கட்சிக்காரர் மே 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நாடு திரும்புவதற்காக விமான பயணசீட்டுக்களை முன்பதிவு செய்திருந்தார். இருப்பினும், அவர் அமெரிக்காவில் ஒரு நாற்காலியில் இருந்து விழுந்து கழுத்து மற்றும் நரம்பு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் அவர் 6 மாதங்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளனர்." என கூறியுள்ளார்.
இதற்கு பதில் வழங்கிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மருத்துவ அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
"இந்த எக்ஸ்ரே அறிக்கைகளைப் பார்த்த பிறகு, இது கழுத்து சுளுக்கு மற்றும் தவறான தோரணை காரணமாக ஏற்பட்ட லேசான தசைப்பிடிப்பு மட்டுமே.
இது ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் குணமாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ அறிக்கைகள் மார்ச் 18, 2025 அன்று வெளியிடப்பட்டன.
பிரதிவாதி சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி சொல்வது போல் 06 மாதங்களுக்கு விமானப் பயணத்தைத் தவிர்க்க மருத்துவ பரிந்துரை இருந்தால், மே 18 மற்றும் 19 ஆம் திகதிகளுக்கான விமான டிக்கெட்டுகள் ஏன் முன்பதிவு செய்யப்பட்டன.
எனவே, இந்த மருத்துவ அறிக்கைகளை நீங்கள் ஏற்க வேண்டாம். சந்தேக நபரின் பிணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த பிரதிவாதி சார்பானசட்டத்தரணி, “எனது கட்சிக்காரர் நோய்வாய்ப்பட்டு வராததால், அவரை ஒரு திருடன் என்று காட்ட முயற்சிக்கிறீர்களா? ஆனால் இவை அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவ அறிக்கைகள். எங்கள் மருத்துவர்களைப் போல திருடர்கள் இல்லை. எனது கட்சிக்காரர் அடுத்த நீதிமன்றத் திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்" என கூறியுள்ளார்.
இதன்படி இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மாத்தறை நீதவான் அருணா புத்ததாச, தனது உத்தரவை அறிவித்தார்.
"இந்த வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன்படி, சந்தேக நபரான பசில் ராஜபகச அடுத்த நீதிமன்றத் திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்படுகிறார். இந்த வழக்கு நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது” என்றார்.