பாலிவுட் திரைப்பட உலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“எனக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவமனை நிர்வாகம் அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து எனது குடும்பத்தினருக்கும், ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்று அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனும் தனக்கும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

77 வயதான அமிதாப் பச்சன் சுமார் ஐம்பது ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் இயங்கி வருகிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.

அவரும், 44 வயதான அவரது மகனான அபிஷேக்கும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தங்களது இருவருக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். இருப்பினும், இருவரது உடல்நிலையும் நிலையாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனையை செய்துகொள்ள வேண்டுமென்று அமிதாப் பச்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த செய்தி வெளியானதும் இவர்களது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும், பல்துறை பிரபலங்களும் சமூக ஊடகங்களில் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அமிதாப் பச்சன் தனது திரையுலக பயணத்தின் தொடக்கத்திலேயே ஜஞ்சீர் மற்றும் ஷோலே போன்ற வெற்றிப்படங்களில் படங்களில் நடித்தார். 1970களில் புகழ் பெற்றதில் இருந்து, அவர் நான்கு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் 15 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல தேசிய, சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். திரைத்துறைக்கு அவர் செய்த பங்களிப்புக்காக பிரான்ஸ் நாட்டு அரசு தனது மிக உயர்ந்த சிவில் விருதான லெஜியன் ஆப் ஹானரையும் வழங்கியுள்ளது.

கொள்ளையர்களை விரட்டிய நெல்லை தம்பதியருக்கு அமிதாப் பாராட்டு

பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் தெரியுமா?

திரைத்துறைக்கு வெளியே சிறிது காலம் அரசியலில் இருந்த அமிதாப் பச்சன் 1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆதரவோடு தேர்தலில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அடுத்த மூன்றாண்டுகளிலேயே ராஜிவ் காந்தி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஊழலால் தான் ஏமாற்றமடைந்துவிட்டதாக கூறி தனது பதவியிலிருந்து விலகினார்.

தொழிலதிபராகவும் இருந்துள்ள அமிதாப் பச்சன், 1995இல் நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அமிதாப் பச்சன் கார்பொரேஷனை தொடங்கினார். இந்த முயற்சி தோல்வியுற்றதும், பிரிட்டனில் பிரபலமாக இருந்த 'வு வான்டஸ் டு பிகேம் ஏ மில்லியனர்' என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இந்திய பதிப்பான 'கோன் பனேகா கரோர்பதி'யை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு மீண்டும் எண்ணற்ற வெற்றிப்படங்களில் நடித்தார். அமிதாப் பச்சன் சமீபத்தில் நடித்த 'குலபோ சித்தபோ' என்ற நகைச்சுவை திரைப்படம் அமேசானில் வெளியானது.

சமீபத்திய மாதங்களாக, கொரோனா வைரஸுக்கு எதிரான அரசுகளின் அறிவுறுத்தல்களை மக்களிடையே கொண்டுசேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.இந்தியாவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி, 8,21,000 நோய்த்தொற்று பாதிப்புகளுடன் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நோய்த்தொற்று பரிசோதனைகள் போதிய அளவு மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், மருத்துவப் பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்றும் பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி