நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் மனித நடமாட்டமில்லாத காடுகளுக்குள் தனியாக நடந்து சென்று பழங்குடிகளிடம் தபால்களை கொண்டு சேர்த்த சிவன், கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரது சேவையை பாராட்டி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டரில் பதிவு வெளியிட, சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

"35 வருடங்களாக தபால்துறையில் பணியாற்றியுள்ளேன். 10 வருடங்களுக்கும் மேலாக அடர்ந்த காடுகளுக்குள் நடந்து சென்று தபால்களை கொண்டு சேர்த்துள்ளேன். வீட்டில் இருப்பதை விட காட்டில் இருப்பதுதான் எனக்கு சந்தோஷம்," என மலைகளின் பசுமையையும், அடர்ந்த காடுகளின் நினைவுகளையும் சுமந்தவாறு பிபிசிக்காக பேசத்தொடங்கினார் ஓய்வுபெற்ற தபால்துறை ஊழியர் சிவன்.

"குன்னூரில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். பள்ளி படிப்பை முடித்ததும், தபால்துறையில் வேலை கிடைத்தது. 1985 ஆம் ஆண்டு வெல்லிங்டன் தபால் நிலையத்தில், தபால்தலை விற்பனையாளராக பணியில் சேர்ந்தேன். மலைவாழ் மக்கள் அனைவருக்கும் இயற்கையின் மீது ஓர் இணைப்பு இருக்கும். அப்படிதான் எனக்கும். அடர்ந்த காடுகளும், அதில் வாழும் வனவிலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும் என்னை இன்றுவரை ஈர்த்துகொண்டே இருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு ஹில்குரோவ் தபால்நிலையத்தில் தபால்காரராக பணிமாறுதல் பெற்றேன். சுமார் 15 கி.மீ தூரம் காட்டுக்குள் உள்ள ஒற்றையடி பாதையில் தனியாக நடந்து சென்று கடிதங்களையும், பண அஞ்சல்களையும் கொண்டு சேர்க்கும் வேலை. நான் கொண்டு செல்லும் தபால்களை பெற்றுக்கொள்ளும் பழங்குடி மக்கள், எனக்காக தரும் தேநீரின் சுவையும், அவர்களின் அன்பும் என்றும் என் நினைவில் இருக்கும்," என சிலாகிக்கிறார் சிவன்.

"காலை 9.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி குன்னூர் தபால்நிலையத்திற்கு செல்வேன். தபால்களை வாங்கி எனது பையில் வைத்துக்கொண்டு, சிகப்பு நிற ஸ்வெட்டரை அணிந்தவாறு பேருந்து பயனமாக ஹில்குரோவ் கிராமத்தை அடைவேன். அங்கிருந்து நடை பயணம் தான். இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத ஒற்றையடி பாதையில் தனியாக நடக்கத் துவங்குவேன். ஆரம்பத்தில் ஷூ அணிந்து காடுகளுக்குள் நடந்தேன். மூன்றாவது மாதம் முதல் செருப்பு மட்டும் அணிந்து நடக்கத்துவங்கினேன். சில பாதைகளில் செருப்பையும் கழட்டி கையில் வைத்துக்கொண்டு, வெறும்காலில் நடப்பேன். மண்ணின் ஈரப்பதம் கால்களில் படும்போது ஓர் சுகம் இருக்கும். நான் நடந்து செல்லும் பாதையில் எனது கால் தடங்களோடு, யானை, கரடி, புலி, காட்டெருமைகளின் கால் தடமும் இருக்கும்."

"ஆரம்பத்தில் வனவிலங்குகளை பார்க்கும்போது பயம் ஏற்பட்டது. ஆனால், சிலநாட்களுக்கு பின் இரண்டு அடி தூரத்தில் யானைகளையும், காட்டெருமைகளையும் கடந்து செல்லப் பழகிவிட்டேன். காடுகளுக்குள் இருக்கும் வித்தியாசமான பூச்சிகளையும், பறவைகளின் ஒலியையும் ரசித்துக்கொண்டே காட்டுக்குள் பயணிப்பது தான் எனது 10 வருட வாழ்க்கையானது. நான் பணியில் சேர்ந்த சமயத்தில் தான், குன்னூர் வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டமும் அதிகரித்திருந்தது. யானைகள் அதிக மோப்ப சக்தி வாய்ந்தவை. நான் மனிதன் என அவைகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக யானைகளின் காய்ந்த சாணத்தை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்வேன்,"

"ஒருநாள், நான் சென்று கொண்டிருந்த பாதையில் யானைக் கூட்டம் வந்தது. அழகான குட்டி யானைகளும் அதில் இருந்தன. நானும் ஓரமாக நடந்து கொண்டே இருந்தேன். திடீரென, கூட்டத்தில் இருந்த ஓரு யானை என்னை தாக்க வந்தது. குட்டி யானையை நான் பிடிக்க வந்திருக்கிறேன் என நினைத்துள்ளது. காடுகளுக்குள் ஓடி சாலையை அடைந்தேன். யானை விடாமல் என்னை துரத்திவந்தது. சாலையின் ஓரம் இருந்த மரங்களுக்கிடையே ஓடி ஒளிந்து கொண்டேன். எனக்கும் யானையின் தும்பிக்கைக்கும் இடையே ஓரு பிரம்மாண்ட மரம் இருந்தது. யானையின் மூச்சுக் காற்று என் மேல் பட்டது. வாழ்க்கை முடிந்தது எனத் தோன்றியது. திடீரென, அந்த சாலையில் வந்த சிலர் தங்களது வாகனத்தில் ஒலி எழுப்பினர். உடனடியாக யானை மீண்டும் தனது கூட்டத்தை நோக்கி ஓடியது. இப்படி பல நினைவுகள் எனக்கும் காடுகளுக்கும் உள்ளன," என கூறிய சிவன், பழங்குடி மக்கள் மீதும் பேரன்பு கொண்டவராக இருக்கிறார்.

"வடுகன்தோட்டம் என்ற மலைகிராமத்தில், பழங்குடி மூதாட்டி ஒருவர் முதியோர் உதவித்தொகைக்காக விண்ணப்பித்திருந்தார். ஒவ்வொரு முறை நான் அந்த கிராமத்திற்கு தபால் கொடுக்க செல்லும் போதும், உதவித்தொகை வந்ததா என விசாரிப்பார். ஆறு மாதங்களுக்கும் மேலானது, ஒருநாளும் அவர் என்னிடம் விசாரிக்கத் தவறியதில்லை. ஒரு நாள் அவர் பெயரில் உதவித்தொகைக்கான பண அஞ்சல் வந்திருந்தது. அதை பார்த்ததும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அன்றைய நாளின் முதல் வேலையாக வடுகன்தோட்டத்திற்கு சென்றேன். உதவித்தொகையை மூதாட்டியின் கையில் வழங்கி அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என நினைத்து, அவரின் வீட்டிற்கு சென்றேன். அவரின் வீட்டின் முன்பு அனைவரும் கூடியிருந்தனர். உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அது மிகவும் வேதனையான ஒரு தருணம்," என கண் கலங்குகிறார் சிவன்.

"எனது குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட பலர் காட்டுக்குள் பயணிக்கும் இந்த வேலை வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். பல தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி அஞ்சல்களை கொண்டு சேர்க்கிறேன். காரணம், என் தபால் பையில் இருக்கும் அந்த அஞ்சல்களும், கடிதங்களும் பலரின் எதிர்பார்ப்பு, கனவு, லட்சியம், அன்பு ஆகியவற்றை சுமக்கிறது. அதை உரியவரிடம் பத்திரமாக கொண்டு சேர்ப்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது. பணி ஓய்வு பெறுகிறேன் என கிராமாத்தினர் சிலரிடம் சொன்னதும், அவர்கள் அழுதுவிட்டனர். எனது வேலையை சிறப்பாக செய்துள்ளேன் என நிறைவாக இருக்கிறது. இமயமலை செல்லவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அதற்காக பணம் சேர்த்துகொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் இமயமலைக்கு சென்று இயற்கையின் மொத்த அழகையும் பார்த்து ரசித்திட வேண்டும்." என ஆவலோடு தெரிவிக்கிறார் சிவன்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி