இலங்கையின் முன்னாள் ஆயுதப்படைத் தளபதிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்த
தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தொடர்புடைய குற்றச்சாட்டுகள் எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர் தொடுக்க முடிவு செய்தவர் அப்போதைய இலங்கையின் நிர்வாகத் தலைவராக இருந்த நான்தான் அந்த முடிவை இலங்கை ஆயுதப் படைகள் செயல்படுத்தின." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "முப்பது ஆண்டுகால புலிகளின் பயங்கரவாதம் 27,965 ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உயிரை மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் கொன்றுள்ளது.
2008ஆம் ஆண்டில் அமெரிக்க FBIஆல் உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பாக அதிகார பூர்வமாக பெயரிடப்பட்ட அமைப்பு இலங்கை அரசாங்கத்தால் 2009இல் தோற்கடிக்கப்பட்டது.
பல்வேறு தரப்பினரின் சட்டரீதியான துன்புறுத்தல்களிலிருந்து அதன் ஆயுதப்படைகளைப் பாதுகாக்க பிரித்தானிய அரசாங்கம் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் சிறப்புச் சட்டத்தை இயற்றியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் கடமைகளைச் செய்த ஆயுதப் படை வீரர்களை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் துன்புறுத்தலுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
போர் முடிவடைந்த சில மாதங்களுக்குப் பிறகு, போர்க்கால இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா 2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நின்றபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2010 ஜனவரி 6 அன்று முன்னாள் இராணுவத் தளபதிக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது.
மேலும் அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவான வாக்குகளில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இந்நிலையில், இந்த விடயம் பிரித்தானிய அரசாங்கம் ஊக்குவிக்கும் கருத்தையும் மறுக்கிறது.
மேலும், 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பின்னர் ஜனநாயக அரசியலில் நுழைந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் மீது தடைகள் விதிக்கப்பட்டிருப்பது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழர்களைத் தண்டிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது தெளிவாகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.