இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியில்
இருந்து நீக்குமாறு கோரி, சபாநாயகரிடம் அரசாங்கம் யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் 115 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்தத் தீர்மானம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேசபந்து தென்னகோனுக்கு பிடியாணை பிறப்பிக்கட்டு சுமார் 20 நாட்களுக்கு பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையிலேயே அவருக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறிருக்க, பொலிஸ் மா அதிபராக பதவி வகிக்க தேசபந்து தென்னக்கோனுக்கு சட்ட ரீதியில் அனுமதியுள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அவரை பதவி நீக்குமாறு கோரி சபாநாயகரிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான அனுமதி நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்.
வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேஷபந்து தென்னகோன், அந்த உத்தரவினைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேஷபந்து தென்னகோன் கண்டி தும்பறை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டு, வீட்டில் இருந்து உணவு எடுத்துவர அனுமதி கோரியிருந்தார்.
சிறைச்சாலைகள் திணைக்களம் குறித்த கோரிக்கையை பரிசீலித்து வீட்டிலிருந்து உணவு எடுத்து வர அனுமதித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மூன்று வேளை உணவுக்கும் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.