சட்டவிரோதமான முறையில்
வாகனம் ஒன்றைப் பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பிணை கோரிக்கையை நுகேகொட பிரதான நீதிவான் திருமதி ருவானி ஜயவர்தன மீண்டும் நிராகரித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான திருமதி ஷஷி பிரபா ரத்வத்தவின் மிரிஹானவிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரிய வந்துள்ளது.
ஒக்டோபர் 30 ஆம் திகதி, அந்த காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லொஹான் ரத்வத்த, மிரிஹான பொலிஸாரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர் ரத்வத்தவின் மனைவி சஷி பிரபா ரத்வத்தவும் நவம்பர் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
குறித்த கார் தொடர்பில் பொலிஸார் முன்வைத்த உண்மைகளை ஆராய்ந்து சந்தேக நபரான திருமதி ரத்வத்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.