மக்கள் விடுதலை முன்னணியினர்
வன்முறையை கைவிட்டு 1981 இல் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டனர். அன்றில் இருந்து அவர்களால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியவில்லை. ஆனால் ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வாவை பதவி விலகுமாறு எவரும் கூறவில்லை. தோல்வியுற்ற அவர்கள் தோல்வியை சகித்துக் கொண்டு தங்கள் இலக்குகளை நோக்கி நகர்ந்தனர்.
இன்றைய (17) ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியே எங்களின் ஸ்தாபக முகாம். ஐக்கிய தேசியக் கட்சி 51 இல் 8 ஆசனங்களாக குறைந்தது. 1971 இல் ஐக்கிய தேசியக் கட்சி 17 ஆசனங்களுக்கு வீழ்ந்தது. அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் கிடைத்தது.
ஆனால் கூடிய அதிகாரம் கிடைத்தவுடன் அந்த ஆட்சிகள் அரசியல் அவலங்களில் முடிவுக்கு வந்தன. அந்த அரசியல் அவலத்தின் இறுதியில் 77 ஆம் ஆண்ட நடந்த தேர்தலில் ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு மக்கள் ஆறில் ஐந்து பெரும்பான்மையை வழங்கினர்.
இவ்வருட பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளிக்கிறோம். இந்தத் தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 30 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் ஏராளம். இந்த காரணிகளை தவிர்த்து நோக்க நோக்க முடியாது. அளிக்கப்பட்ட வாக்குகளின் மூலமே தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு பொதுத் தேர்தல் வரலாற்றில் அதிக மக்கள் வாக்களிக்காத தேர்தலாக மாறியுள்ளது.
இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தி சம்பிரதாய எதிர்க்கட்சியாக செயல்பட தயாராக இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி சம்பிரதாய அரசியலுக்கு சவால் விடுத்த ஒரு அரசியல் இயக்கமாகும். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் குறைபாடுகள் நிகழ்ந்தன. அந்த குறைபாடுகளை ஆய்வு செய்து வருகிறோம். தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை விட தேசிய மக்கள் சக்தி சிறப்பாக தங்களை தகவமைத்துக் கொண்டது.
நாட்டு மக்கள் கடும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். மக்களுக்கு மூன்று வேளையும் சரியாக உணவு கிடைக்கவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். உலகில் வெற்றி பெற்ற நாடுகள் பயணித்த பாதையில் அரசு செல்கிறதா அல்லது தோல்வி கண்ட நாடுகள் பயணித்த பாதையில் அரசு செல்கிறதா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நல்ல காரியங்களைச் செய்யும்போது, அரசாங்கத்துக்கு எமது பூரண ஆதரவை நல்குவோம்.
எங்களது வேலைத்திட்டத்தையும் கொள்கைகளையும் மக்கள் கருத்திற் கொள்ளவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியில் திறமையான குழுவினர் காணப்படுகின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்பது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தோம். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய பொருளாதார வேலைத்திட்டத்தை நாட்டுக்கு முன்வைத்தோம்.
ஆனால், தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கு, தற்போதுள்ள அரசியல் கலாசாரத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை காட்ட தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் தமது வாக்குகளை அளித்தனர்.
எனினும், அரசு மக்களுக்காக என்ன செய்கிறது என்பது தொடர்பில் கவனித்து வருகிறோம். அரசாங்கம் மக்களின் உரிமைகளுக்காக தம்மை அர்ப்பணித்து நாட்டை சரியான பொருளாதார பாதைக்கு கொண்டு செல்லுமா என்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தி வருகிறோம்.
கடந்த காலங்களில் நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படவில்லை. நாட்டை வீழ்த்தும் விதமாக நாம் நடந்து கொள்ளவில்லை.
மக்கள் படும் துன்பங்கள் குறித்து அடிக்கடி பேசினோம். மக்களின் துன்பங்களுக்குப் பதிலளித்தோம். நாட்டில் இத்தகையதொரு எதிர்க்கட்சி இருந்ததில்லை. நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கு அர்ப்பணிப்புள்ள கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம் எமது பொறுப்பை நிறைவேற்றி வருகிறோம். ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் பணியாற்றுவோம். நாட்டு மக்களுக்கு அரசாங்கம் செய்யும் நல்ல காரியங்களுக்கு நாம் நல்ல பதிலை வழங்குவோம். ஏனைய சந்தர்ப்பங்களில் விமர்சனங்களை முன்வைக்கவும் நாம் தயங்க மாட்டோம்.