இலங்கையில் 'லங்கா ஈ நியூஸ்'
இணையத்தளத்துக்கான அணுகலை முடக்கும் உத்தரவை அரசாங்கம் நீக்கியுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இணையத்தளத்தை முடக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.
இலண்டனில் இருந்து இயங்கும் 'லங்கா ஈ நியூஸ்' இணையத்தளம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி தடை செய்யப்பட்டது. இதற்குக் காரணம் 'லங்கா ஈ நியூஸ்' இணையத்தளம் வெளியிட்ட செய்தியால் ஜனாதிபது சிறிசேன கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம், நிபுணத்துவ இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் பலவும் இந்தத் தடை தொடர்பில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருந்த நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவும் அப்போது 'லங்கா ஈ நியூஸ்' முடக்கப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமாகத் தோன்றியமை அதில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது.
இன்று இணையத்தளங்களை தடைசெய்வது 21ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தாத அர்த்தமற்ற செயல் என மங்கள சமரவீர ஒருமுறை கூறியிருந்தார்.
கொழும்பு ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்தில் நடைபெற்ற "ஊடகத்தின் அரசியல்" நிகழ்ச்சியில் உரையாற்றிய ஊடகத்துறை அவர், இலங்கையில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் முடக்கப்பட்டமை தொடர்பில் தனது கருத்தையும் விளக்கினார்.
"லங்கா ஈ நியூஸ் தடை செய்யப்பட்டமை தொடர்பில் நானும் ஒரு வார்த்தை கூறுவேன். இன்று எந்த இணையத்தளத்தையும் தடை செய்ய முடியாது. தடை செய்ய முயற்சிப்பது வெறும் பின்னடைவு தான்" என மங்கள சமரவீர அங்கு தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் ராஜபக்க்ஷ ஆட்சிக் காலத்தில் அதன் ஆசிரியரான சந்ருவன் சேனாதீரவுக்கும இணையத்தளத்துக்கும் தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து உயிரைப் பாதுகாப்பதற்காக அவர் வெளிநாடு சென்றதுடன் அந்த இணையத்தளத்தை வெளிநாட்டில் இருந்து தொடர்ந்து பராமரித்து வருகின்றார்.