இலங்கையுடனான நெருக்கமான
ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சு, பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய முகவர்களின் உடனடியானதும், விரிவானதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா இன்று அறுகம் வளைகுடா பகுதிக்கு விடுவித்திருந்த பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்கியுள்ளது.
இலங்கை எந்தவொரு பாதுகாப்பு எச்சரிக்கையையும் உடனடியாகக் கவனத்தில் கொள்வதுடன் அதற்கமைய சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உட்படாத வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உரிய அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் ஒருங்கிணைந்த மற்றும் துரித பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தியிருந்தனர்
சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அறுகம்பை பகுதியில் பாதுகாப்பைப் பேணுமாறு இலங்கை பொலிஸாரால் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சகல நபர்களும் இம்முயற்சிகளில் இலங்கை பொலிஸாருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாடு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், அனைத்து பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு முகவர்களுடனும் இணைந்து,
இலங்கை தரப்பின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரடியாக சம்பந்தப்பட்ட இராஜதந்திர தூதரகங்களின் தலைவர்களுக்கு விளக்கமளித்து, விடுத்திருந்த பாதுகாப்பு எச்சரிக்கை மற்றும் அதற்கான பயண ஆலோசனைகளை நீக்குமாறு வலியுறுத்தினார். .
இக்கோரிக்கையானது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹேரத்தினால் நேற்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. "இலங்கை அரசாங்கத்துடனும், அதன் சட்ட அமுலாக்கத்துடனும் வலுவான பங்காளித்துவத்தை" ஐக்கிய அமெரிக்கா மதிப்பதாகத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்கத் தரப்பானது, இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கையை இரத்து செய்தது.
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதியானதும், அழகானதும் மற்றும் நட்பு ரீதியானதுமான இடமாக இலங்கை விளங்குவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு