ஊழியர் சேமலாப நிதியத்தில்
இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்வைத்த யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநரிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
நான்குக்கும் மேற்பட்ட தொழிலாளர் நலன்புரி அமைப்புகளின் நிதியைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து அதிகாரிகள் மௌனக் கொள்கையைப் பின்பற்றுவதாக தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் தொழிற்சங்கப் பிரதிநிதி அன்டன் மார்கஸ் (12) கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
27 லட்சம் தொழிலாளர்களின் 4 டிரில்லியன் நிதி வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பான கடிதம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநரிடம் இருந்து பதில் கிடைக்காமை குறித்து மத்திய வங்கி ஆளுநரை நேரில் சென்று கேட்டறிய முயன்றும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் 14 தொழிற்சங்கங்கள் தற்போது 27 லட்சம் ஊழியர்களின் ஊழியர் நலன்புரி நிதியைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகளிடம் பல விடயங்களை முன்வைக்கின்றன.
நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காததால் இந்த கடிதத்தை அனுப்பினோம். ஆனால் அதற்கும் இதுவரை பதில் இல்லை.
இதற்கான சரியான பதில் கிடைக்கும் வரை இலட்சக்கணக்கான தபால் அட்டைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி இதற்கு எதிராக செயற்பட தயாராக உள்ளோம் என்றார்