கொழும்பு கிராண்ட்பாஸ் முவதெர
உயன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மின்தூக்கி (லிப்ட்) ஒன்று உடைந்து வீழ்ந்ததில் நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆவது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வீட்டுத் தொகுதியின் 5ஆவது மாடியில் உள்ள ஒரு குழுவினர் நேற்று (10) பிறந்தநாள் விழாவை பக்கத்து வீடுகளிலிருந்த மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கொண்டாடினர்.
இது தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த அடுக்குமாடி குடியிருப்பை சோதனையிட வந்துள்ளனர்.
5ஆவது மாடியில் பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டுக்கு லிப்டில் செல்லும் போது லிஃப்ட் உடைந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் இதற்கு முன்னரும் இவ்வாறான விபத்துக்களை எதிர்நோக்கிய போதிலும், இவ்வாறான விபத்துக்களை தடுப்பதற்குரிய அதிகாரிகளிடம் இருந்து எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்