ஏறாவூர் பிரதேசத்துக்குள் மார்க்கம்
எனும் போர்வையில் சிறு குழுக்களை உருவாக்கி ஏறாவூரின் மார்க்க விடயங்களில் தலையிடுவதனை ஹிஸ்புல்லா நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா ஏறாவூர் பிரதேசத்துக்குள் பள்ளிவாசல்களை அமைத்து தனக்கு சார்பான நிருவாகத்தினையும் வைத்துக்கொண்டு ஏறாவூரின் மார்க்க விடயங்களிலும் தலையிட்டு வருகிறார்.
தனது அரசியல் தேவைகளுக்காகவே அவர் இவ்வாறு செய்கிறார். அவரது இந்த செயற்பாடுகளினால் ஏறாவூருக்குள் பல்வேறு முரண்பாடுகள் எழுந்துள்ளது. ஹிஸ்புல்லாவுடைய இந்த செயற்பாடுகளை காத்தான்குடி உலமா சபையும் கன்டிக்க வேண்டும்.
ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு மிக அருகாமையில் ஆற்றங்கரைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த இரண்டு பள்ளிகளிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜும்ஆ இடம்பெற்று வருகிறது. இந்த ஆற்றங்கரை பள்ளியானது ஹிஸ்புல்லா சார்பான ஒரு குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.
ஒரே பகுதிக்குள் இரண்டு பள்ளிகளிலும் ஜும்மா நடத்தப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சினைகளின்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அந்தப் பகுதியில் ஒரு ஜும்ஆவை மாத்திரம் நடாத்துமாறும் அதனை இரு பள்ளிகளிலும் சுழற்சி முறையில் நடாத்துமாறும் பத்வா வழங்கியது. ஆனால் ஆற்றங்கரை பள்ளி நிர்வாகம் அந்த பத்வாவை புறக்கணித்து தொடர்ந்தும் ஜும்ஆவை நடாத்தி வருகிறது.
கடந்த காலங்களில் தப்லீக் ஜமாஆத்தினரை கூட ஆற்றங்கரை பள்ளிக்கு வரவேண்டாம் என அந்தப் பள்ளி நிர்வாகம் தடை விதித்திருந்தது.
பின்னர் அந்த நிர்வாகத்தினரை ஹிஸ்புல்லா அழைத்து பேசியதன் காரணமாக தப்லீக் ஜமாத்தினருக்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா ஏறாவூரின் உள்ளூர் மார்க்க விடயங்களில் தலையிட்டு பள்ளி நிர்வாகங்களுக்கிடையே மோதல்களை உருவாக்குவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஏறாவூர் பிரதேசத்துக்குள் ஆங்காங்கே பள்ளிகளை அமைத்துக் கொண்டு தனது வாசிக்கு ஏற்றவாறு நிர்வாகங்களை அமைக்கும் ஹிஸ்புல்லா தனது அரசியல் தேவைகளுக்காகவே இவ்வாறான பணிகளை செய்கிறார்.
அரசியலுக்காக குழுக்களை உருவாக்குவதில் ஹிஸ்புல்லா வல்லவர். ஏறாவூர் பிரதேசத்துக்கென்றொரு தனித்துவம் உள்ளது. ஏறாவூரின் மார்க்க விடயங்களை கையாளுவதற்கு ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா, அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன உள்ளது.
தனது அரசியல் மற்றும் பொருளாதார பலத்தால் ஏறாவூர் மக்களை ஏமாற்றி அரசியல் செய்துவரும் ஹிஸ்புல்லா ஏறாவூர் மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகிறார். இவ்வாறான மோசமான செயற்பாடுகளை அவர் கைவிட வேண்டும் எனவும் சுபைர் மேலும் தெரிவித்தார்,