நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம்
தொடர்பில் குளியாபிட்டி தலைமையக பிரதானபொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டி மேலதிக மாவட்ட நீதிபதி தினிந்து சமரசிங்கவே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் அவரது மனைவி குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இது தொடர்பான முறைப்பாட்டை பிரதேச பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக குறித்த நபரும் குறித்த பெண்ணும் பிரதேச பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்துக்கு அழைக்கப்பட்டனர்.
அதன் பின்னர் குறித்த பெண், விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டி குளியாபிட்டி தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி செயற்பட்ட குளியாபிட்டிய தலைமையக பிரதான பரிசோதகர் பிரதேச பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு வந்து குறித்த பெண்ணின் கணவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரிவின் உயர் அதிகாரிகள் தாக்குதலை தடுத்து, சம்பவம் குறித்து முறைப்பாடளித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய நீதிமன்றில் பொலிஸார் உண்மைகளை அறிக்கை செய்திருந்தனர்.