முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான அழைப்பாணைகள் பிரதிவாதிகளுக்கு கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
இதன்படி, எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு தெரிவித்த நீதிமன்றம், உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் மனுவை எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.