நியாயமான,நேர்மையான
அதிகாரிகளை கைது செய்யுங்கள் என்று நாமல் குமார கத்துவதற்குப் பின்னால் மிகப் பெரிய ஒரு சூழ்ச்சி இருப்பதாகவும், அதனை வெளிக் கொணர இதற்கு முந்திய ஜனாபதிகளுக்கும் அரசாங்கங்களுக்கும் கூட முதுகெலும்பு இருக்கவில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், உடுநுவர, வட்டதெனியவில் செவ்வாய்க் கிழமை(3) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்வதற்கு சதி ஒன்று நடக்கிறது என்று சொல்ல வந்தவர்தான் இந்த நாமல் குமார.
தற்போது மீண்டும் வந்து ரவி செனவிரத்தினவையும், ஷானி அபயசேகரவையும் கைது செய்யுங்கள் என்று கூச்சல் போடுகிறார்.
இந்த வட்டதெனிய,தஸ்கர, போன்ற பல இடங்களில் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டது நினைவிருக்கும். சில இளைஞர்களின் வீடுகளில் குண்டை வைத்து அவர்களை பிடித்துக் கொண்டு சென்றார்கள்.
அந்த கட்டத்தில் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக, தாக்குதலின் பிறகு இளைஞர்கள் மாறி,மாறி கைது செய்யப்பட்டார்கள்.வகுப்புகளுக் குச் சென்ற அப்பாவி இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
மாவனல்லையில் புத்தர் சிலை உடைக்கப்பட்டது கைது செய்யப்பட்ட. அந்த இளம் வயதினருக்கு தெரியுமா? அவ்வாறு தெரியாமல் சென்று, இவர்களை பிடிப்பதற்கு ஆதாரமில்லை,.இவர்கள் பயிற்சி வகுப்புக்கு சென்றவர்கள் என்ற சந்தேகத்தில், ஒரு கைக்குண்டை வைத்து பிடித்துக் கொண்டுபோய் அடைத்தார்கள்.
மாதக் கணக்கில் இன்னும் வழக்குப் பேசுகிறார்கள். அடிக்கடி அந்த குடும்பத்தவர்கள் என்னோடு பேசுவார்கள், அவர்களுக்கு நான் என்னாலான சட்ட உதவிகளை இயன்ற அளவுக்குச் செய்திருக்கிறேன்.
ஆனால் ,இவை எல்லாவற்றிற்கும் பின்னால் பெரிய சதி ஒன்று இருக்கிறது. இந்த சதி அம்பலத்திற்கு வரவேண்டும் என்றுதான் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தின் தலைவர் கர்தினாலும் அடிக்கடி பேசுகிறார்.
புதிதாக இந்த நாமல் குமார ஏன் திரும்ப வெளியில் வரவேண்டும் ? இவருக்கு பின்னால் இந்த நாட்டில் ஒரு இரகசிய குழு இயங்குகிறது, இவருக்கு மேலால் இருக்கின்ற மிக மோசமான கும்பல் ஒன்று இவர்களை வழிநடாத்துகிறது என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும்.
நியாயமான,நேர்மையான அதிகாரிகளை கைது செய்யுங்கள் என்று கத்துவதற்குப் பின்னால் மிகப் பெரிய ஒரு சூழ்ச்சியை வெளியில் கொண்டுவந்து விடாம ல் தடுப்பார்கள் என்ற அச்சம் நிலவுகின்றது.. ஆனால் ,இந்த சூழ்ச்சியை கண்டுபிடிப்பதற்கு இந்த .அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்கிறதா என்பதைத்தான் நாங்கள் முதலில் பார்க்கவேண்டும்.
இதற்கு முந்திய ஜனாதிபதிகளுக்கு அந்த முதுகெலும்பு இருக்கவில்லை, ரணில் விக்கிரமசிங்கவும் எவ்வளவோ சொன்னார், அவர் காலத்தில் இது நடக்கும்,அது நடக்கும் என்று உறுதி மொழி சொன்னார்.
இந்த கர்தினலும் இந்த அரசாங்கத்தை நம்புவதாக சொல்கிறார். ஆனால் எந்த ஜனாதிபதிக்கும் இந்த இரும்புத் திரைக்கு அப்பால்போக இயலாது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், உண்மை வெளிக்கொணரப்படவேண்டும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் பற்றி , உண்மையான பல விடயங்களை பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறேன்.எனவே, இது வெளிவந்தாகவேண்டும் என்ற விவகாரத்தில் நாங்களும் அவதானமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இதே ஜனாதிபதி பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் பேசிய விடயங்களை அவரும் பேசியிருக்கிறார். மாறி,மாறி நாங்கள் பல ஆதாரங்களை காட்டியிருக்கிறோம். எனவே, இந்த ஜனாதிபதிக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது நடந்த சம்பவங்களின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்பது மிகப் பிரதானமான விடயமாகும்.
நாங்கள் நிறைய அபிவிருத்திகளை செய்திருக்கிறோம் அதை இங்கு பேச வரவில்லை ,ஏனென்றால் அமைச்சராக இருக்கிற நேரம் அபிவிருத்தி செய்யத்தான் வேண்டும் அது எங்களுடைய கடமை, அதைப் பறை சாற்றுவது எனது பழக்கமுமல்ல, இருந்தாலும் மக்களுடைய பாதுகாப்பு,மக்களுடைய குரலாக இருக்கும் என்னுடைய பிரதானமான கடமையென்று நான் எண்ணுகின்றேன். அதற்காக அபிவிருத்தி செய்வதில்லை என்பதல்ல. எனவே எப்போதெல்லாம் பிரச்சினைகள் உருவெடுக்கிறதோ ,அந்த பிரச்சினைகளின் போது பிரதான தலையீடுகளை நாங்கள் செய்திருக்கிறோம்,உங்களுடைய சார்பில் பேசியிருக்கிறோம், உங்களுக்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுமிருக்கிறோம் என்றார்.