(க.கிஷாந்தன்)

தொழிலாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று தடம்மாறி பயணிக்கின்றது. தொழிலாளர்களின் நலனில் அக்கறையின்றி புதிதாக கட்சியில் இணைந்து கொண்டவர்கள்  தரகுப்பணம் பெறுதல், சிரேஷ்ட உறுப்பினர்களை அகெளரவப்படுத்தல், களியாட்டங்களில் ஈடுபடல் போன்ற செயற்பாடுகளிலேயே காலத்தை கழிக்கின்றனர். இதற்கு மேல் அங்கு இருந்தால் எமது சுயகெளரவம் பாதிக்கப்படும் என்ற காரணத்தினாலேயே விலக நேரிட்டது என்று தெரிவிக்கின்றார்  இ.தொ.காவின் உப தலைவர்களில் ஒருவராக செயற்பட்டவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அருளானந்தம் பிலிப்குமார்.

இது தொடர்பில்  இன்று (06) அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 38 வருடங்களாக நான் காங்கிரஸில் இணைந்து மக்கள் சேவையாற்றி வருகின்றேன். இத்தனை வருடங்களில் என் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இருந்ததில்லை என்ற பெருமையோடு தான் இன்று இந்த சந்திப்பை ஏற்படுத்தினேன். தற்போதைய கட்சியின் நிலைமைகள் குறித்து மக்களுக்கு சில உண்மைகள் தெரிய வேண்டியுள்ளது. வீடமைப்புத் திட்டமென்றாலும் என்ன அபிவிருத்திகள் என்றாலும் தற்போது கட்சியில் புதிதாக இணைந்து கொண்டவர்களும் உயர்மட்ட பிரமுகர்களும் கமிஷனை எதிர்ப்பார்த்தே வேலையாற்றுகின்றனர்.

இவர்களின் இந்த புதிய போக்கினால் தொழிலாளர்கள் கைவிடப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, அவர்களின் நிலவுரிமை , குடியிருப்பு தொடர்பில் இவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்துமே நாடகமாகும். இதை என்னால் ஆதரமாக நிரூபிக்க முடியும். இவ்வாறு தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யும் ஒரு அமைப்பில் மனசாட்சியை ஒரு பக்கம் கழற்றி வைத்து விட்டு என்னால் இருக்க முடியாது. அமரர்களான செளமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமானுக்குப் பிறகு கட்சி மிக மோசமான பாதையில் செல்கின்றது.

கட்சியில் உள்ள சிலரினால் சிரேஷ்ட உறுப்பினர்களும் மாவட்ட தலைவர்களும் , தொழிற்சங்க காரியாலய உத்தியோகஸ்தர்களும் கடும் மனவிரக்தியில் உள்ளனர். கட்சிக்கு இருந்த 48 காரியாலயங்களில் இப்போது எத்தனை உள்ளன? சில காரியாலயங்கள் விற்கப்பட்டுள்ளன. சிலது கட்சி உயர்மட்ட உறுப்பினர்களின் உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இப்போது பாராளுமன்றத் தேர்தலை வைத்து  தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். நாங்கள் இல்லாவிட்டால் மலையக மக்களின் நிலம் அபகரிக்கப்படும் என்றும் மலையகத்தில் மக்கள் வாழவே முடியாது என்றும் பிரசாரங்களை செய்கின்றனர். அதில் உண்மை கிடையாது.

ஏனைய கட்சிகள், சுயேச்சை குழுக்களிலும் தமிழ் பிரதிநிதிகள் போட்டியிடுகின்றனர். இ.தொ.கா அரசாங்கத்தில் இருந்த சந்தர்ப்பத்திலேயே நுவரெலியா மாகஸ்தோட்ட பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலத்தை அரசாங்கம் சுவீகரித்தது. வர்த்தமானி அறிவித்தலை காட்டி நான் பொதுச்செயலாளர் ஜீவனிடம் இது குறித்து கேட்ட போது யாருக்கும் இதை கூறி விடாதீர்கள் என்றார். அந்த ஆவணத்தை நான் எங்கும் காட்டலாம்.

இப்படி பல சம்பவங்களைக் கூறலாம். பல துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து தேசிய சபையிலும் நான் கேள்வியெழுப்பியதால் என்னை புறக்கணிக்கத் தொடங்கினர். கட்சி பணத்தில் இறுதியாக வாங்கிய இரண்டு சொகுசு வாகனங்கள் பற்றியும் நான் கேட்டேன். அதற்கு பதில்கள் இல்லை. தொழிலாளர்களின் சந்தா பணத்தில் கட்டியெழுப்பப்பட்ட கட்சியில் ஊழல்கள் இருந்தால் அதை கேட்க வேண்டும். நான் கேட்டேன். எதிர்ப்புகளை சம்பாதித்தேன். இப்படி ஒருவன் கட்சியை விட்டு சென்று விட்டான் என இப்போது அங்கு சிலருக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் மக்களுக்கு பதில் கூற வேண்டும். அவர்களின் சந்தா பணத்துக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக கூற வேண்டும். தொழிலாளர்களின் வீட்டுத்திட்டத்துக்கு, மின்சார இணைப்புக்கு என இவர்கள் யாரிடம் எவ்வளவு பணம் பெற்றிருக்கின்றார்கள் என்ற அனைத்து விபரங்களும் எனக்குத் தெரியும்.

என் வாழ்நாளையே நான் இந்த கட்சிக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்தேன். நேர்மையாக இருந்தேன். இன்னும் லயன் குடியிருப்பில் தான் இருக்கின்றேன். அந்த திருப்தியோடு கட்சியிலிருந்து வெளியேறுகின்றேன். எனது அடுத்த கட்ட நகர்வு குறித்து அறிவிப்பேன். நாட்டில் ஊழல் துஷ்பிரயோகத்தை ஒழிக்க ஒரு ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். அதே போன்று தொழிலாளர்களும் ஊழல் இல்லாத உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி