கொழும்பு மெகசின் சிறைச்சாலையில்
பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைத் திணைக்களத்தின் பிரதான ஜெயிலர் மற்றும் களஞ்சிய பிரிவில் கடமையாற்றிய இரு அதிகாரிகளே பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மெகசீன் சிறைச்சாலையில் உள்ள பல கைதிகளுடன் நடந்து கொண்ட முறை தொட்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டே இரண்டு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைக்கு உட்பட்டு பணித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்த சிறையின் ஆர் வார்டில் அவர் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் இலக்கத்தகடு இல்லாத வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முதலில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அவசர சிகிச்சையின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவமனையின் 14ஆவது வார்டில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.