(பாறுக் ஷிஹான்)
எமது நாட்டில் புதிய அரசாங்கம்
புதிய ஜனாதிபதியின் கீழ் வந்துள்ளது. அந்தப் புதிய அரசாங்கத்தை நாங்கள் வரவேற்க வேண்டும். அநுரகுமார திசாநாயக்க ஒரு ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ இருக்காதவர். ஆனாலும் பாராளுமன்றத்தில் நீண்ட காலம் எம்.பியாக இருந்த அனுபவம் உள்ளவர். அவர் நாட்டை திறம்பட கட்டியெழுப்புவார் என நம்புகிறோம் என உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று (04) கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
மேலும் அவர் தெரிவிக்கையில்_
எது எப்படி இருப்பினும் அரசாங்கம் சில விடயங்களில் தடுமாறுவதை காண முடிகிறது. ஆனால் எடுத்த உடனே அரசாங்கத்தை நாங்கள் விமர்சிக்க முடியாது.இன்னும் பல காலம் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
அதன் பின்னர் தான் நாங்கள் பல முடிவுகளை எடுக்க முடியும்.இந்தச் சூழலில் ஜனாதிபதி முறையான திட்டமிடலில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆதங்கம் எங்களிடம் உள்ளது.
அண்மையில் முட்டை பிரச்சினை ஏற்பட்டிருந்தது. மீண்டும் பாஸ்போர்ட் பிரச்சினை ஏற்பட்டது. இவ்வாறு சில பிரச்சினைகள் எழுகின்றபோது எமக்கு கவலையாக உள்ளது. அவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.அத்துடன் ஜனாதிபதியின் கட்சியினர் முஸ்லிம்களின் தனியார் சட்ட நிலைமை பற்றி ஆங்காங்கே பேசி வருகின்றார்கள்.எனவே ஜனாதிபதி இவ்வாறான பிரச்சிகைளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.