2011ஆம் ஆண்டு காணாமல்போன

மனித உரிமை  செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கு விசாரணையின் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, யாழ் நீதிவான் நீதிமன்றத்தைத் தவிர்ந்த  நாட்டிலுள்ள வேறு எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என அவரது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை அழைக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
 
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
 
இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
அப்போது, ​​கோட்டாபய ராஜபக்க்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குறித்த வழக்கு தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் சாட்சியமளிக்க முடியாது என தமது கட்சிக்காரரின் நிலைப்பாட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்.
 
ஆனால், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தைத் தவிர வேறு நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார். 
 
இந்நிலையில், இந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களினால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியமளிக்க 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி ஆஜராகுமாறு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அறிவிக்கப்பட்டது.
 
தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது எனவும் எனவே, குறித்த அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்கி உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி கோட்டாபய ராஜபக்க்ஷ 2019 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
 
அந்தக் கோரிக்கையை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜனாதிபதியாக செயற்படுவதால் கோட்டாபய ராஜபக்க்ஷவை சாட்சியமளிக்க அழைக்க முடியாது என அப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது எனவும், கோட்டாபய ராஜபக்க்ஷ தற்போது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ளதால் அவரை சாட்சியமளிக்க அழைக்குமாறும் கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உயர் நீதிமன்றில் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி