தனது மனைவியால் சுவையான பிரியாணி சமைக்க முடியாததால், அவரை விவாகரத்து செய்ய
விரும்புவதாகக் கூறி, டென்மார்க்கைச் சேர்ந்த கணவர் ஒருவர் கடந்த 3ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
41 வயதான மேற்படி டென்மார்க் நாட்டவர், நான்கு மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பிரியாணி மீது அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதாகவும், மனைவியால் அதை சுவையாக சமைக்க முடியாததால் வீட்டில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் சண்டையிட்டுக்கொள்ள விரும்பாத நபர் என்பதால், முழு விசாரணை நடத்தப்பட்டு, தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, மேற்படி டென்மார்க் நாட்டவர் தனது மனுவில் கோரியுள்ளார்.