இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது பாரதூரமான உரிமை மீறல் துஷ்பிரயோகங்களில்
ஈடுபட்டமைக்காக மூன்று முன்னாள் படைத்தளபதிகள் மற்றும் அரச துணைப் படை குழுவாக இயங்கிய தரப்பின் பொறுப்பாளரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா ஆகியோருக்கு பிரிட்டன் பயணத்தடை விதித்திருக்கின்றது.
போக்குவரத்துத் தடைகள், சொத்துக்களை முடக்குதல் உட்பட பல நடவடிக்கைகள் இந்த தடைகளில் அடங்கியுள்ளன என்று தெரிய வருகிறது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது சட்டவிரோதப் படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், கொடூரங்கள் போன்ற மிக மோசமான பாரிய மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டமைக்காக நால்வருக்கும் எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.
ராஜபக் ஷ தரப்பினருக்கு கனடாவும், சில படை அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் ஏற்கனவே தடைகளை அறிவித்துள்ள பின்னணியில் இப்போது பிரிட்டன் இந்தத் தடைகளை அறிவித்திருக்கின்றது.
இலங்கையில் யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட மிக மோசமான யுத்தக் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவை தொடர்பில் ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சியங்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் நடவடிக்கையை ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸில் ஏற்கனவே மும்முரமாக ஆரம்பித்துள்ள சூழ்நிலையில் - பல லட்சக்கணக்கான ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன எனக் கூறப்படுகின்ற சூழ்நிலையில் - இத்தகைய நடவடிக்கைகள் இனிமேல் ஒவ்வொன்றாகக் கட்டவிழும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே.
பொறுப்பான படை அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், ஏனையோருக்கும் எதிராக நாடுகள் இத்தகைய இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் ஏற்கனவே தனது அவதானிப்பு அறிக்கைகளில் வேண்டியுள்ள பின்புலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இனி முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது வெறுமனே படைத்தளபதிகள் மட்டத்தோடு அடங்கி விடக் கூடிய விடயம் அல்ல. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பொறுப்பான மனித உரிமை மீறல்களை மும்மரமாக முன் நின்று முன்னெடுத்த படையினர் ஒவ்வொருவருக்கு எதிராகவும் - கருணா போல துணைக் குழுக்களாகச் செயற்பட்ட அனைவருக்கும் எதிராகவும் - இத்தகைய நடவடிக்கைகள் நாடுகளால், குறிப்பாக மேற்கு நாடுகளால், தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிகின்றது. இத்தகைய முயற்சியின் ஆரம்பத்தையே பிரிட்டன் இப்போது தொடக்கி வைத்திருக்கின்றது.
இலங்கையில் தேசிய மட்டத்தில் ஒரு குட்டித் தேர்தல் கட்டவிழும் சமயத்தில் இந்தத் தடை அறிவிப்பு வந்திருக்கின்றது. இதனை பௌத்த - சிங்களப் பேரினவாதம் தன்னுடைய பேரின மேலாண்மைக்கு எதிரான மேற்குலகின் மேலாதிக்க செயற்பாடு என்று இனி விமர்சித்து, காட்டமாகக் கெம்பி எழத்தொடங்கும்.
தேர்தலில் வாக்குப் பெறுவதற்காக தென்னிலங்கைக் கட்சிகள் - பிரதான கட்சிகளும் அரசு தரப்பும் - இந்த விடயத்தை இனவாத போக்கில் விமர்சித்து, தங்கள் தளபதிகளை காப்பாற்றுவது குறித்து முழக்கியடிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
நடந்து முடிந்த பேரழிவுகள் தொடர்பில் - யுத்தக் குற்றங்கள் தொடர்பில் - மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் - மனித உரிமை மீறல்கள் தொடர்பில் - நீதி, நியாயமான, சர்வதேச நியமங்களுக்கு அமைவான விசாரணைகளை நடத்தி, உண்மைகளைக் கண்டறிந்து பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்தி, தவறிழைத்தோரை அம்பலப்படுத்தித் தண்டித்து, இழப்பீடுகளை வழங்க, மீள நிகழாமையை உறுதிப்படுத்தாத வரை சர்வதேசத்தின் கிடுக்குப்பிடி இலங்கை மீது இனிமேல் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும் என்பதுதான் நிலைமை.
அதன் ஆரம்பக் குறியீடே - பூர்வாங்க சமிக்ஞையே - இப்போது பிரிட்டன் எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கையாகும். தொடர் நடவடிக்கைகளை சர்வதேசத்திடம் இருந்து நாங்கள் தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.
-முரசு ஆசிரியர் தலையங்கம்